இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே உள்ள தேவிகுளம் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தற்கொலை முயற்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடுதியில், கடந்த இரண்டுநாளுக்கு முன்னர் 27 வயதுடைய வாலிபரும், 25 வயதுடைய பெண்ணும் அறை எடுத்து தங்கினர். இரவிலொரு நேரத்தில் விடுதி ஊழியர் அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியும் திறக்கப்படாததை கண்டார். இது குறித்து சந்தேகம் கொண்டு விடுதி நிர்வாகம் தேவிகுளம் காவல்நிலையத்தில் புகார் செய்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அறைக்கதவை திறந்தபோது, அந்த வாலிபரும் பெண்ணும் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததை கண்டனர். உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு அடிமாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
தொடர்ந்த விசாரணையில், அந்த வாலிபர் தமிழகத்தின் நாகப்பட்டினம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் என்பதும், அவருடன் இருந்த பெண் மயிலாடுதுறையைச் சேர்ந்த அவரது உறவினர் என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருமணமாகி தலா இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் என்பதும் தெரிந்தது.
உறவினர்கள் என்ற உறவிலிருந்த பழக்கம், கள்ளக்காதலாக மாறியதால், இருவருக்கும் குடும்பங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நிலையில், இருவரும் மூணாறு வந்து விடுதியில் தங்கி, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தற்போது போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தேவிகுளம் மற்றும் மூணாறு பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.