தரங்கம்பாடி அருகே திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா; திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திகடன் செலுத்தினர் ; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சந்தன காப்பு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில் திருவிளையாட்டம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வீதியுலா நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காப்பு கட்டி விரதம் இருந்த மஞ்சள் உடை உடுத்தி வாயில் அலகு குத்தியும், கூண்டு காவடிகள் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதை அடுத்து விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திகடன் செலுத்தினர். திருவிளையாட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
