தரங்கம்பாடியில் உள்ள கோட்டை தர்காவின் 455-ஆம் ஆண்டு கந்தூரி விழா ; சீர்வரிசை எடுத்து வந்த மீனவ பஞ்சாயத்தார்களை பேண்ட் வாத்தியங்களுடன் உற்சாகமாக வரவேற்ற இஸ்லாமிய பஞ்சாயத்தார்கள் மற்றும் தர்கா நிர்வாக சபையினர். மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கோட்டை தர்காவில் 455-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா இன்று நடைபெற உள்ள நிலையில், தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள ரேணுகாதேவி அம்மன் கோவிலில் இருந்து மீனவ பஞ்சாயத்தார்கள் பூ, பழம் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகளை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோட்டை தர்காவை அடைந்தனர். அவர்களுக்கு இஸ்லாமிய பஞ்சாயத்தார்கள் மற்றும் தர்கா நிர்வாக சபையினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாகமாக வரவேற்று, தர்காவுக்குள் அழைத்துச் சென்று சீர்வரிசைகளை பெற்றுக்கொண்டனர். பின்னர் பாத்தியா ஓதி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்து, கட்டிஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர். இஸ்லாமியர்களின் தர்கா கந்தூரி விழாவில் இந்து மீனவ பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கியது மத நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்து, காண்போரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
