மயிலாடுதுறை அருகே கீழ மாரியம்மன் ஆலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது; பக்தர்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டும், தீக்குழியில் நடந்து வந்தும் தீமிதிதத்து மெய்சிலிர்க்க வைத்தது. 16 அடி நீளம் கொண்ட அலகினை குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி அங்கிருந்தவர்களை பக்தி பரவசம் அடையச் செய்தது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கீழ மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் 35 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதனிடையே விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காவிரி கரையில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் சக்தி கரகம் புறப்பாடாகி மஞ்சள் உடை உடுத்திய காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் மேள தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தனர். அங்கு கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டும், தீக்குழியில் நடந்து வந்தும் தீமிதிதத்து மெய்சிலிர்க்க வைத்தது. மேலும், 16 அடி நீளம் கொண்ட அலகினை வாயில் குத்தியபடி பக்தர்கள் தீமிதித்த காட்சி அங்கிருந்தவர்களை பக்தி பரவசம் அடையச் செய்தது. பின்னர் சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆறுபாதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.















