நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், தற்போது இயக்கி வரும் ‘மகுடம்’ படத்தின் பணிகளுடன், தனது புதிய முயற்சி ‘Yours Frankly Vishal’ வீடியோ பாட்காஸ்டிலும் அவ்வப்போது ரசிகர்கள் முன் திறந்த மனதுடன் உரையாடி வருகிறார். கடந்த மாதம் முதல் எபிசோட் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பகுதி வெளியானுள்ளது. இதில் தனது வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு முக்கியமான சம்பவங்களை விஷால் பகிர்ந்துள்ளார்.
வருங்கால மனைவி என அறிமுகம் செய்யப்பட்ட தன்ஷிகா குறித்து பேசும் போது, ஒருமுறை ஒரு பொது நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் டி.ராஜேந்தர், மேடையில் அவளை அவமானப்படுத்தியதாக விஷால் நினைவுகூர்ந்தார். அங்கு இருந்த சிலர் சிரித்தபோதும், அந்த நிகழ்வு தன்ஷிகாவுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
அந்த நேரத்தில் தன்ஷிகாவின் அப்பார்ட்மென்ட் அருகே தன் அலுவலகம் இருந்ததால், அவர் தனியாக இருந்தாரா என்பதை உறுதி செய்து நேரில் சென்று ஆறுதல் கூறியதாகவும் விஷால் தெரிவித்தார். “அந்த அரை மணி நேர உரையாடல்தான் தன்னை மீண்டும் நிம்மதியாக்கியது” என தன்ஷிகா பின்னர் அவரிடம் பகிர்ந்ததாகவும் அவர் கூறினார். “இது பெரிய விஷயம் இல்லை, மனதில் எடுத்துக்கொள்ளாதே; இத்தகைய சூழல்கள் கலைத் துறையில் நடக்கும்” என்று அப்போது தன்ஷிகாவை சமாதானப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
ரசிகர்களிடமிருந்து கிடைத்த அதிர்ச்சியூட்டும் அனுபவம்
ரசிகர்களிடம் இருந்து வந்த மறக்க முடியாத அனுபவத்தைப் பற்றி பேசும்போது, திருமணம் செய்ய வேண்டும் என நேரடியாக கூறுவோர் இருப்பதாக விஷால் தெரிவித்தார். “திரையில் காணும் விஷால், நிஜ வாழ்க்கையில் உள்ள விஷாலுக்கு முற்றிலும் வேறுபட்டவர். திரையுலக படிமத்தைக் கொண்டு வாழ்க்கை முடிவெடுப்பது உகந்தது அல்ல” என்று அவர் கூறினார்.
சமீபத்தில் ஒரு பெண், தனது ரத்தத்தைப் பயன்படுத்தி விஷாலின் உருவத்தை வரைந்து கொண்டு வந்து, திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த சம்பவத்தையும் அவர் பகிர்ந்தார். அந்த செயல் ஆபத்தானது என உணர்ந்து, உடனடியாக அந்த பெண்ணை அங்கிருந்து அனுப்பிவைத்ததாக விஷால் தெரிவித்தார்.
“இத்தகைய செயல்களுக்கு ஊக்கமளிப்பது சரியல்ல” என்றும் அவர் வலியுறுத்தினார்.
















