மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் மதுபான கடைகள் அடைப்பு, காவல்துறை பாதுகாப்பு அளித்தால் மட்டுமே கடையை திறப்போம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் அறிவிப்பு :-
டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கும் விவகாரம் பெரிதாகி வருகிறது.தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய், பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடி பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளில் தொடர்ந்து பத்து ரூபாய் வசூலிப்பதாக பல்வேறு இடங்களில், வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள மதுபான கடை ஒன்றில் பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்ததாக தெரிவித்து தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், அந்த கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இருவர் மீது சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள டாஸ்மாக் ஊழியர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீர் கடை அடைப்பு செய்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள 42 மதுபான கடைகளும் திறக்கப்படவில்லை. தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து வந்து மனு அளித்தனர். டாஸ்மாக் கடையில் சராசரியாக ஒரு நாளைக்கு 8 லட்ச ரூபாய் விற்பனை நடைபெறும் நிலையில், அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக 10 ஊழியர்கள் தற்காலிகமாக தங்களால் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், கடையின் கூடுதல் வாடகை மற்றும் மின் கட்டணம், லாரிகளில் சரக்கு ஏற்றி வரும் பொழுது அளிக்கப்படும் மாமுல் கட்டணம் உள்ளிட்டவை தங்களால் கட்டப்பட வேண்டியுள்ள நிலையில், அரசாங்கமே இந்த செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இரண்டு ஊழியர்களை மட்டும் வைத்து கடை நடத்தினால் கூட்டம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் தங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும், ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ள டாஸ்மாக் ஊழியர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கடைகளை திறக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
