தமிழ் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கௌரி’ தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் துர்கா – கனகா என இரட்டை வேடங்களில் நடித்துவந்த நடிகை நந்தினி, திடீரென உயிரிழந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நந்தினி, கன்னட சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தமிழில் நடிக்க வந்த அவர், முதல் தொடரிலேயே இரட்டை வேடங்களில் நடித்தது கவனம் ஈர்த்தது. ‘கௌரி’ தொடரில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றிருந்தது.
இந்த நிலையில், சீரியல் படப்பிடிப்பில் இடைவேளை கிடைத்ததையடுத்து பெங்களூரு சென்றிருந்த நந்தினி, அங்கு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தினியின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினர், சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
