சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை பயன்படுத்த தடை விதிக்க கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதலில், தனி நீதிபதி இரு கொடிகளை ஒப்பிட்டு, த.வெ.க. கட்சியின் கொடி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாது என்று மனுவை தள்ளுபடி செய்து, தடை விதிக்க மறுத்தார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து பச்சையப்பன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் எம். சுதீர்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க த.வெ.க. தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையை மேலும் ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.