உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விக்கி, தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.12 இலிருந்து ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தினாலும், நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் ஆகஸ்ட் 18ம் தேதி திங்கள்கிழமை பங்கு விலையில் ஏற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
தற்போது சில பகுதிகளில் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ள இந்த கட்டண உயர்வால், ஆர்டர்கள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற போட்டியாளர்களைப் போல பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அடிக்கடி மாற்றி வருகிறது. 2023 ஏப்ரல் மாதத்தில் முதன்முதலில் ரூ.2 கட்டணமாக வசூலிக்கத் தொடங்கிய ஸ்விக்கி, படிப்படியாக கட்டணத்தை உயர்த்தி தற்போது ரூ.14 ஆக கொண்டு வந்துள்ளது. இந்த தொகை ஜிஎஸ்டியையும் (GST) உள்ளடக்கியதாகும்.
ஜொமாட்டோ தற்போது ஜிஎஸ்டியைத் தவிர்த்து ரூ.10 கட்டணமாக வசூலிக்கிறது. 2024 அக்டோபர் மாதத்தில் ஜொமாட்டோவும் தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியிருந்தது. சராசரி ஆர்டர் மதிப்பான ரூ.500–600க்கு எதிராக, இந்த கட்டணம் குறைந்த அளவாகத் தோன்றினாலும், நிறுவனங்களின் ஒருங்கிணைந்த லாபத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஏப்ரல்–ஜூன் காலாண்டில் ஸ்விக்கியின் செயல்பாட்டு வருவாய் 54% உயர்ந்து ரூ.4,961 கோடியாக இருந்தது. அதே காலத்தில் நிறுவனம் ரூ.1,197 கோடி நிகர இழப்பைச் சந்தித்தது. இன்ஸ்டாமார்ட் பிரிவில் அதிக முதலீடு செய்ததன் விளைவாக இழப்புகள் இரட்டிப்பாகியிருந்தபோதிலும், பிளாட்ஃபார்ம் கட்டண உயர்வு வருவாய் நிலையை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ராபிடோ நிறுவனம், “ஓன்லி” என்ற புதிய உணவு விநியோக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கோரமங்கலா, HSR, BTM லேஅவுட் பகுதிகளில் செயல்படும் இந்த சேவை, உணவகங்களிடம் இருந்து ஸ்விக்கி, ஜொமாட்டோவின் 16–30% கமிஷன் விகிதத்துக்கு பதிலாக, வெறும் 8–15% மட்டுமே வசூலிக்கிறது. இதனால், உணவு விநியோக சந்தையில் கடும் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















