மயிலாடுதுறை அருகே சுந்தரப்பன் சாவடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை வாயைப் பொத்தி மிரட்டி 9 சவரன் நகை 15 ஆயிரம் ரொக்கம் கொள்ளை.வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர் குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை எலந்தங்குடி அருகே உள்ள சுந்தரப்பன்சாவடி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செல்லமணி(73) இரண்டு மகள்கள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
கணவர் பன்னீர்செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த நிலையில் மூதாட்டி செல்லமணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் இன்று அதிகாலை செல்லமணி வீட்டின் கொல்லைபுரம் வழியாக வந்து பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.
அங்கு ஒரு அறையில் இருந்த பீரோவில் இருந்து ரூபாய் 15,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்ததுடன் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த செல்லமணியை வாயில் துணியை வைத்து வாயை பொத்தி கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 4 சவரன் உள்ள வளையல்கள் என 9 சவரன் தங்க நகைககளை பறித்துக் கொண்டு பின் வழியில் தப்பிச் சென்றார்.
இதனையடுத்து சுதாரித்த மூதாட்டி செல்லமணி வீட்டை விட்டு வெளியே வந்து சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளை சம்பவம் குறித்து பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதுடன் கைரேகை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில் தங்கள் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

















