திருவாரூரில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்டதால் பரபரப்பு.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதான கோரிக்கையாக சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும். கருணை அடப்படையிலான பணி நிரந்தரத்தை 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் வெளி முகமை, ஒப்பந்த, தற்காலிக, தொகுப்பூதிய பணி நியமனங்களை கைவிட்டு, நிரந்தர அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய்துறையில் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருவாரூர் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.














