திருவனந்தபுரம் : கேரளாவில் ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர்களுக்காக மாணவர்கள் பாத பூஜை செய்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு மற்றும் மாவேலிக்கரா பகுதிகளில் உள்ள சில சிபிஎஸ்இ பள்ளிகளில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்துள்ள மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, “அடிமைத்தனத்தை பிரதிபலிக்கும் இத்தகைய நிகழ்வுகள் கல்வியின் அடிப்படை நோக்கத்திற்கே விரோதமானவை. இது ஏற்க முடியாதது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” எனக் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இது சாதிப்பாகுபாட்டை மீண்டும் இளைய தலைமுறையிடம் ஊக்குவிக்க நினைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய பள்ளிகள் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவை எனவும் இடதுசாரி மாணவர் அமைப்பான SFI குற்றம்சாட்டியுள்ளது.
இதே நேரத்தில், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாகும் என மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் கருத்து தெரிவித்தார். “இதை விமர்சிப்பவர்கள் எந்த கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள்?” என்கிற கேள்வி எழுப்புகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.