புனே :
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி அளிக்க இந்திய இராணுவம் மே 7-ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த இராணுவ நடவடிக்கையில் பல தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். மே 10-ஆம் தேதி இந்த தாக்குதல் நிறைவடைந்தது.
இந்தநிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் விரோத போக்கை குறித்து சமூக ஊடகத்தில் கருத்து வெளியிட்டதற்காக புனேவிலுள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் 19 வயது மாணவி கைது செய்யப்பட்டார். தனது பதிவை வெளியிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் நீக்கியதாகவும், கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் மாணவி தெரிவித்தார். இருப்பினும், அவரது கல்வி நிறுவனமான சிங்காட் அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் – சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரி, அவரை கல்லூரியிலிருந்து நீக்கியது.
இதையடுத்து மாணவி புனே யெர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கல்லூரியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கௌரி கோட்சே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள், “மாணவி தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். இப்படிப்பட்ட தவறுக்கு பதிலாக அவரை கைது செய்து, குற்றவாளியாக்குவது முறையா? ஒரு மாணவியின் வாழ்க்கையை இப்படியா அழிக்கப் போகிறீர்கள்? இது ஒரு மாணவியின் எதிர்காலத்தையே பாழாக்குகிறது,” என்று கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அரசு வழக்கறிஞர், “மாணவியின் செயல் தேச நலனுக்கு எதிரானது” என்று பதிலளித்த போது, நீதிபதிகள், “தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட மாணவியின் கருத்தால் தேச நலனுக்கு பாதிப்பு ஏற்படாது. மாணவர்கள் கருத்து தெரிவிக்கவே கூடாது என்ற நோக்கத்தில்தானா அரசின் இந்த அணுகுமுறை?” எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், பருவத் தேர்வுகள் நடைபெறும் நிலையில், மாணவி போலீஸ் பாதுகாப்புடன் தேர்வெழுதலாம் என கல்லூரி தரப்பு கூறியது. ஆனால், நீதிமன்றம் “மாணவி குற்றவாளி அல்ல. அவள் மீதமுள்ள மூன்று தேர்வுகளை தடை இல்லாமல் எழுத அனுமதி வழங்கப்பட வேண்டும். போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை” எனத் தீர்ப்பளித்தது.
அத்துடன், “கல்வி நிறுவனத்தின் நோக்கம் மாணவர்களை சீர்திருத்துவதேயானால், அவர்களை குற்றவாளியாக்க முடியாது. மாணவி தேர்வெழுதுவதைத் தடுக்க அரசு அல்லது கல்வி நிறுவனத்திற்கு உரிமையில்லை” எனக் கடுமையாக விமர்சித்தது.