திருத்தணி காந்தி ரோடு பகுதியில்
போலீஸ் பாதுகாப்புடன் மழைநீர் வடிகால்வாய் பணிகள்
திருத்தணி,மார்ச்.29:
மழைநீர் வடிகால்வாய் அமைக்க பொதுமக்கள் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு முதல் தெருவில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3.55 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஒரு வாரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று உறுதியளித்திருந்தனர். அதன்படி நகராட்சி ஆணையர் கன்னியப்பன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் நாகராஜ் ஆகியோர் , மற்றும் போலீசார் பாதுகாப்புடன் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கினர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஜெசிபி இயந்திரம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி உரிய அனுமதி பெற்று மழைநீர் கால்வாய் அமைக்கப்படுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று சமாதானப்படுத்தினர். இதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் தொடங்கி நடைபெற்றது. குடியிருப்புகளுக்கு பாதிப்பின்றி மழைநீர் கால்வாய் அமைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
