சிவகங்கை :
நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும், அரசியல் களத்தில் பரபரப்பும் அதிகரித்தது.
இந்த சூழலில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான பிரச்சினைகள் நீங்க வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
கோவிலில் ‘ஜனநாயகன்’ திரைப்படப் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்த புஸ்ஸி ஆனந்த், உள்பிரகாரத்தை சுற்றி வந்து மருதமரம் அருகிலும், பரிவார தெய்வங்கள் மற்றும் நவகிரகங்களையும் வலம் வந்து வழிபாடு செய்தார். தொடர்ந்து 108 தேங்காய்கள் உடைத்து, படம் வெளியீட்டில் ஏற்பட்ட தடைகள் விலக வேண்டும் என வேண்டுதல் செய்தார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம், மத உணர்வுகளை பாதிக்கும் காட்சிகள் உள்ளதாக கூறி, தணிக்கை வாரியம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியிருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இன்று நீதிமன்றம் யூ/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், மறுதணிக்கைக்கு அனுப்பிய சென்சார் போர்டின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தபோதும், புஸ்ஸி ஆனந்த் இதே கோவிலில் வந்து வழிபாடு நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

















