மயிலாடுதுறை பெரிய பள்ளிவாசல், சீனிவாசபுரம் திடல், உள்ளிட்ட இடங்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை. துவா செய்து வழிபாடு, புத்தாடை அணிந்து ஒருவர் ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர் :-
இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரித் பண்டிகை இன்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி மயிலாடுதுறை நகரத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது, ஜமாத் தலைவர் எம் எஸ் சபீர்தீன் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதுபோல் சீனிவாசபுரத்தில் அமைந்துள்ள திடலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும் உலகில் அன்பும் அறமும் மனிதநேயமும் தழைத்தோங்கவும் சிறப்புத் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்து முன்னோர்களுக்கு துவா செய்தனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டி ஆரத்தழுவியும், குழுப் புகைப்படங்கள் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதேபோல் வடகரை, சங்கரன்பந்தல், நீடூர், குத்தாலம், தேரிழந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது.













