மதுரை:
ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற தெற்கு ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழில் கேள்வித்தாள் வழங்கப்படாமல் தேர்வு நடைபெற்றதால் எழுந்த சர்ச்சைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்வில் கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வழங்கப்பட்டன. மாநில மொழி உட்பட குறைந்தது மூன்று மொழிகளில் கேள்வித்தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். “தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இந்தித் திணிப்பு, தமிழ் ஒழிப்பு ஆகிய இரட்டை தண்டவாளங்களில் ரயில்வே பயணிக்கிறது. தேர்வு ரத்து செய்து, தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும்” என அவர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாக காரணங்களுக்காக ஆகஸ்ட் 10ஆம் தேதி நடத்தப்பட்ட இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி அகற்றப்பட்டுள்ளது. என் கோரிக்கை ஏற்கப்பட்டு தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடைபெறும். உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.