தெலுங்கு மாநில அரசியல் தலைவரான கும்மடி நரசய்யாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாகுகிறது.
கிராம தலைவராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய கும்மடி நரசய்யா, 1983 முதல் 1994 வரை, மேலும் 1999 முதல் 2009 வரை யெல்லந்து தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சமூக சேவை மற்றும் நேர்மையான அரசியலால் மக்களின் நம்பிக்கையை பெற்றவர் எனவும் அறியப்படுகிறார்.
இப்போது, அவரின் வாழ்க்கை வரலாறு `கும்மடி நரசய்யா’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகுகிறது. இதில் முக்கிய கதாபாத்திரமான கும்மடி நரசய்யாவாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கிறார். இப்படத்தை பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்குகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கான்செப்ட் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் PAN INDIA திரைப்படமாக இது உருவாகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் திரையிடப்படும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தற்போது சிவராஜ்குமார் நடித்துவரும் படங்களில் அர்ஜூன் ஜென்யா இயக்கத்தில் 45’, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2’, புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் ராம்சரணுடன் பெத்தி’, ரோஹித் இயக்கத்தில் உத்ரகர்நாடகா’, மற்றும் ஹேமந்த் எம் ராவ் இயக்கத்தில் 666 Operation Dream Theater’ ஆகியவை அடங்கும். இப்போது அந்த பட்டியலில் கும்மடி நரசய்யா’ திரைப்படமும் இணைந்துள்ளது.
 
			















