மயிலாடுதுறையில் கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, 6850 பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார். அப்போது, அவர் கூறுகையில், கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்காக, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக, மாற்றுத்திறனாளிகளுக்காக பயன்படக்கூடிய ஒரு துறையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே திருவள்ளுர் மாவட்டத்தில் முதன் முதலாக இந்த கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த கூட்டுறவுத்துறை விரிவடைந்துள்ளது. அதற்கு, அடித்தளம் எடுத்துக்கொடுத்தது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகள். 2006-ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், விவசாயிகளின் கூட்டுறவு கடன் ரத்து செய்யப்படும் என்று கூறி ரூ.7 ஆயிரம் கோடியை ரத்து செய்ததன் காரணமாகவே, இன்றைக்கு இந்த கூட்டுறவுத்துறை உயர்ந்துள்ளது என்றார். தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலம் 6850 பயனாளிகளுக்கு பயிர்க்கடன், சுயஉதவிக்குழுக்கடன், கறவை மாட்டு கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறுவணிக கடன், வீட்டுவசதி கடன், மகளிர் தொழிற்கடன் என ரூ.51 கோடியே 31 லட்சம் மதிப்பில் அமைச்சர்;; வழங்கினார்கள். கூட்டுறவு வார விழாவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.




















