“Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லை” – பாடகி சின்மயின் நேர்மையான பதில்!

‘மீ டூ’ சர்ச்சைக்குப் பிறகு, தமிழ் திரைப்படங்களில் சில பாடல்களை மட்டுமே பாடி வந்த பாடகி சின்மயி, தற்போது ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் முக்கிய கவனம் பெற்றிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “தக் லைஃப்” படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்களில், இந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு சின்மயி பாடியுள்ளார். தமிழில், ‘முத்த மழை’ என்ற பாடலை ‘Dhee’ பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில், ‘முத்த மழை’ பாடலை சின்மயி மேடையில் நேரில் பாடினார். இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாகி, யூடியூப் டிரெண்டிங்கில் 4வது நாளாக முதலிடத்தில் தொடர்ந்து இருக்கிறது. இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலைக் கேட்ட ரசிகர்கள், “சின்மயியின் குரல் ஒரிஜினல் Dhee வெர்ஷனைவிட அருமையாக இருக்கிறது” என்ற பாராட்டுக்களுடன், “சின்மயி இத்தனை நாள் ஏன் பாடவில்லை?” என்ற கேள்விகளையும் எழுப்பத் தொடங்கினர். இதனால் சின்மயியின் குரல் மற்றும் Dhee-வின் குரலை ஒப்பிட்டுக் கருத்துகள் இணையத்தில் பரவத் தொடங்கியது.

இதற்கான பதிலாக, சின்மயி சமீபத்திய ஒரு நேர்காணலில் தெரிவித்ததாவது:

Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என்று கூறுவது தேவையில்லாத ஒன்று. இது, சம்பந்தமே இல்லாமல் இரண்டு கலைஞர்களை மல்யுத்த போட்டியில் போட்டியிடச் சொல்வது போல உள்ளது. கலைஞர்களாக நாங்கள் ஒருவரையொருவர் போட்டியாளராகக் கருதுவதில்லை. மாற்றாக, ஒருவரின் திறமையை கண்டு வியக்கவே செய்கிறோம்.

இன்னும் 15 வருடங்களில் Dhee, 100 சின்மயிகளையும் 100 ஷ்ரேயா கோஷல்களையும் தாண்டி வளரக்கூடிய திறமை உள்ளவர். இப்போது அவர் ஒரு சிறு பெண். அவரது குரலை என்னுடைய குரலுடன் ஒப்பிடுவது தேவையில்லை. எனக்கே 18–20 வயதில் இப்படிச் சிங்கிங் வந்திருக்காது. இது அனுபவத்தால் வந்ததுதான்.

எங்கள் குரல்கள் ஒப்பீடு செய்யப்பட்டதற்காக, நான் Dhee-யிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.”

சின்மயின் இந்த நேர்மையான பதில், ரசிகர்கள் மற்றும் துறையினர் மத்தியில் பெரிய ஆதரவைப் பெற்றுவருகிறது. கலைஞர்களுக்குள் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்தும் இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Exit mobile version