சென்னை :
ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஒரு தனி ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
இந்த ஆணையம், புதிய “ஜாதி ஆணவக் கொலை தடுப்பு சட்டம்” உருவாக்கம் தொடர்பாக பரிந்துரைகள் வழங்கும். இதில் சட்ட வல்லுநர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், மானுடவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் இடம்பெற உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது :
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் பிறந்த தமிழக மண்ணில் சாதி என்ற வேறுபாடு இடம் பெறக்கூடாது. உலகம் அறிவு மயமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்பு மயமாக மாறுவதை சில நிகழ்வுகள் தடுக்கின்றன. ஜாதி காரணமாகவோ, வேறு காரணத்தினாலோ நடந்தாலும் கொலை என்பது கொலையே. அனைத்து வகையான ஆதிக்க மனப்போக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” என கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர்,
“சமூகங்களில் பெயர் விகுதி திருத்தம் உள்ளிட்ட பரிந்துரைகளை பிரதமரை சந்தித்தபோது முன்வைத்தேன். ஒருவரை மற்றொருவர் கொல்வதை எந்த நாகரீக சமூகமும் ஏற்க முடியாது. ஆதிக்க மனோபாவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” என்றார்.
முதல்வர் மேலும் கூறியதாவது:
“சுயமரியாதை, சமத்துவம், அன்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு மனிதநேய சமூகத்தை உருவாக்குவது அனைவரின் கடமையாகும். சீர்திருத்தப் பிரசாரமும், குற்றத்திற்கான தண்டனையும் இணைந்து செயல்பட வேண்டும்,” என வலியுறுத்தினார்.
அத்துடன், புதிய ஆணவக் கொலை தடுப்பு சட்டம் வடிவமைப்பதற்கான பரிந்துரைகள் கிடைத்ததும், அரசு அதனை அடிப்படையாகக் கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
 
			















