சென்னை :
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதனை ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை” எனத் தெரிவித்தார்.
பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு வடபழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் பிரிந்து சென்ற தலைவர்கள் குறித்த கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
“அதிமுகவை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. சிலர் கைக்கூலிகளை வைத்து செயல்படுகிறார்கள். அவர்கள் யார் என்பதும் எங்களுக்குத் தெரியும். அவர்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்” என்று பழனிசாமி எச்சரித்தார்.
மேலும், “முன்னாள் சிலர் கட்சியை சிதைக்க முயன்றபோதும் நாங்கள் பொறுமையாக இருந்தோம். துணை முதலமைச்சர் பதவியளித்தோம். ஆனாலும், அவர்கள் திருந்தவில்லை. கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம், 18 எம்.எல்.ஏ.க்களை கடத்திய சம்பவம் – இவற்றை எப்படி மீண்டும் ஏற்றுக்கொள்ள முடியும்?” எனக் கேட்டார்.
“ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை கபளீகரம் செய்ய முயன்றபோது, ஆட்சியை கவிழ்க்க முயன்றபோது நம்மை காப்பாற்றியது மத்திய அரசு. அந்த நன்றியை மறக்கமாட்டோம்” எனவும் கூறினார்.
பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பது குறித்த கேள்விக்கு, “கட்சிக்காக உழைப்பவர்களைத் தான் நாம் அனுசரிக்க முடியும். வெட்டி பேச்சு பேசுபவர்களை அல்ல. அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள்; இறைவனும் அவர்களை மன்னிக்கமாட்டான்” எனக் கடுமையாக எச்சரித்தார்.
அதேவேளை, நடிகர் விஜயின் அரசியல் பிரசாரம் குறித்து மறைமுகமாக விமர்சித்த பழனிசாமி, “ஊடகங்களில் அதிமுக செய்தி நான்கு நிமிடம் மட்டுமே காட்டப்படுகிறது. ஆனால், ஒன்றுமில்லாத விஷயங்களை நாள் முழுவதும் ஒளிபரப்புகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.















