ஐபிஎல் -2025ல் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 228 ரன்கள் அடித்தது.
ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
குஜராத் அணியின் தொடக்க வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் 49 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். இந்த போட்டி மட்டுமின்றி நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் தனி ஆளாக நின்று குஜராத் அணிக்கு ரன்களை குவித்த சாய் சுதர்சன் நேற்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் களமிறங்கி 759 ரன்களை குவித்து ஆச்சரியபட வைத்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் 2025 சீசனில் 700 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார். 1 சதம் மற்றும் 6 அரை சதங்களுடன் 759 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 5வது இடத்தில் சாய் சுதர்சன் இருக்கிறார்.