சென்னை: பாமகவில் கட்சி ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் ஒரு பெரும் சுழற்சி உருவாகியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு தற்போது கட்சி மட்டுமின்றி தமிழக அரசியல் வரலாற்றிலும் முக்கியமான பரபரப்பாக மாறியுள்ளது.
“தவறு செய்தது நான் தான்!” – ராமதாஸ் ஆவேசம்
சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை நோக்கி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். “நான் தான் தவறு செய்தேன். அவரை 35 வயதில் ஒன்றிய அமைச்சராக பரிந்துரை செய்ததே என் தவறு. அதிலிருந்தே இன்றைய நிலை உருவானது,” என அவர் தெரிவித்தார்.
மேலும், அன்புமணி மேடையில் நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், அவரிடம் இருந்து நேர்மறையான ஒத்துழைப்பு இல்லையெனவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார். மருமகள் சௌமியாவையும் அவருடைய பேச்சில் விமர்சித்தது, சமூக வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
“வளர்த்த கிடா மார்பில் உதைத்தது!” – ராமதாஸ் வேதனை
மேடையில் மைக்கை வீசியது, பாட்டிலால் தாக்க முயற்சி செய்தது உள்ளிட்ட சம்பவங்களை எடுத்துரைத்த ராமதாஸ், “வீட்டுக்குள்ளே பேச வேண்டிய விஷயங்களை வெளியில் கொண்டு வந்தது யார்?” என்று கேள்வி எழுப்பினார். குடும்பத்தினரிடம் கூட ஆவேசமாகக் கூச்சலிட்டதாகவும், “எல்லோரும் எனக்கு புத்தி சொல்றீங்களா?” எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அன்புமணியின் பதில்: “நான் தான் தலைவர்!”
இந்நிலையில், பாமகவின் சட்ட விதிகளின் படி செயல்படத் தொடங்கியுள்ள அன்புமணி, “நிர்வாகிகளை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் அதிகாரம் தலைவருக்கே உள்ளது. தற்போது அந்த தலைவர் நான்தான். எனது உத்தரவே செல்லும்,” என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
பொதுக்குழு கூட்டம், முக்கிய முடிவுகள்?
அன்புமணியை ஆதரிக்கும் மாநில செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு கூட்டத்தை நடத்தி கட்சி அவரது பக்கத்தில் இருப்பதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேசமயம், ‘நிறுவனர்’ பதவியை நீக்குவதற்கு பதிலாக, அதை கெளரவப் பதவியாக மாற்றலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் எதிர்காலம்?
இக்கட்டான சூழ்நிலையில் பாமகவின் நிலை என்னவாகும்? அன்புமணியின் அணி வெல்லுமா அல்லது ராமதாஸ் பக்கம் மீண்டும் திருப்பமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.