சாய் பல்லவி நடித்த ‘ஏக் தின்’ நவம்பரில் வெளியீடு – பாலிவுட்டில் முதல் படம்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்றது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்த இத்திரைப்படம், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடப்பட்டு பெரும் வசூலை பெற்றது.

இந்த படம், இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாகவும் நடித்தனர். இருவரின் காட்சிகளும் விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ‘தண்டேல்’ என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது தனது முதல் ஹிந்திப் படமான ‘ஏக் தின்’ மூலமாக பாலிவுட்டிலும் தனது கால் பதிக்க உள்ளார்.

அமீர்கானின் மகன் ஜூனைத் கானுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள இந்த காதல் திரைப்படத்தை சுனில் பாண்டே இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து, இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் நவம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஏக் தின்’ படத்தைத் தொடர்ந்து, சாய் பல்லவி ஹிந்தியில் உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார்.

Exit mobile version