‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீகணேஷ். அதன் பின் வெளியான ‘குருதி ஆட்டம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதன்போது, அடுத்த படத்தை மக்கள் விரும்பும் படமாக உருவாக்குவேன் என அவர் உறுதியளித்திருந்தார்.
அந்த உறுதிப்பாட்டுக்கு இணங்க, சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடித்த ‘3BHK’ திரைப்படம் உருவானது. அம்ரித் ராம்நாத் இசையமைத்த இந்த படம், நடுத்தரக் குடும்பம் ஒரு பெருநகரில் வீடு வாங்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டு, யதார்த்தமான கதை சொல்லும்விதமாக ஜூலை 4-ஆம் தேதி வெளியானது.
திரைப்படத்தில் சரத்குமார் நடித்த தந்தை கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது. குடும்ப உணர்வுகளை பிரதிபலித்த இந்தக் கதை, திரையரங்கிலும் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையில், உலக கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர் தனது சமீபத்திய பேட்டியில் இந்தப் படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ரெடிட் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் அவரிடம் சமீபத்தில் பிடித்த திரைப்படம் குறித்து கேட்டபோது, சச்சின் பதிலளிக்கையில், “நேரம் கிடைக்கும் போதெல்லாம் சினிமா பார்ப்பேன். சமீபத்தில் ‘3BHK’ மற்றும் மராத்தி திரைப்படமான ‘Ata Thambyacha Naay’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என தெரிவித்துள்ளார்.
சச்சின் தெரிவித்த இந்த வார்த்தைகளுக்கு, இயக்குனர் ஸ்ரீகணேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். அவர் பதிவில், “மிக்க நன்றி சச்சின் சார். நீங்கள்தான் என் குழந்தைப் பருவ ஹீரோ. நீங்கள் கூறிய இந்த வார்த்தை எங்களுக்கு மிகப்பெரியது,” என்று குறிப்பிட்டுள்ளார்.















