தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோத்தாரி (60) அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் புகாரில், ஷில்பா – ராஜ் தம்பதி இணைந்து ‘டீல் டிவி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் ரூ.60 கோடி கடனாக பெற்றதாகவும், பின்னர் அந்த நிறுவனம் திவாலாகியதாகவும் கூறியுள்ளார். மேலும், பெற்ற பணத்தை வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதால், விசாரணையை தடையின்றி நடத்தும் நோக்கில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.















