ஆன்மீகப் புண்ணியத் தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், கடந்த ஒரு மாத காலத்தில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தந்து, அக்னி தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 30 நாட்களுக்குப் பிறகு நேற்று கோயிலின் பல்வேறு சன்னதிகளில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் செல்லத்துரை நேரிடி மேற்பார்வையில், சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் பாதுகாப்பாகத் திறக்கப்பட்டு காணிக்கைகள் சேகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் கோயிலின் கல்யாண மண்டபத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உதவி ஆணையர் ரவீந்திரன், கோயில் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் பேஸ்கார்கள் முன்னிலையில் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றது. இப்பணியில் கோயில் ஊழியர்கள், சிவனடியார் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டனர். நாள் முழுவதும் நடைபெற்ற இந்த எண்ணிகையின் முடிவில், பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனாகச் செலுத்திய ரொக்கப் பணம் மட்டும் மொத்தம் 2 கோடியே 09 லட்சத்து 80 ஆயிரத்து 165 ரூபாய் வசூலாகி உள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரொக்கப் பணம் தவிர, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களையும் பக்தர்கள் தாராளமாகத் தானமாக வழங்கியுள்ளனர். அதன்படி, 85 கிராம் தங்கம் மற்றும் 5 கிலோ 100 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாகக் கிடைத்துள்ளன. கடந்த காலங்களை விடச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாலும், சபரிமலை சீசன் மற்றும் விடுமுறை நாட்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலாலும் இந்த முறை உண்டியல் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருவாய் அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, கோயில் பராமரிப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
















