விழுப்புரம் : பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க) தந்தை-மகன் இடையே தீவிர கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளன. “அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக நியமித்தது என் தவறு” என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடுமையாக பேசினார்.
புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து தொடங்கிய ராமதாஸ்–அன்புமணி பனிப்போர், தற்போது நேரடி குற்றச்சாட்டுகளாக மாறியுள்ளது. தந்தை ராமதாஸ் தலைமைக் கட்சியில் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றினார். இதை அடுத்து, மகன் அன்புமணி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
மே 29ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ்,
“அன்புமணியை மத்திய அமைச்சராக நியமித்தது என் சத்தியத்தையும் மீறிய செயல். அது என் வாழ்க்கையின் பெரிய தவறு” என தெரிவித்தார்.
“நான் குற்றவாளியா ?”
அன்புமணியின் அண்மைய பேச்சுகளால் மக்கள் மத்தியில் தன்னை குற்றவாளியாக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும்,
“அன்புமணி அனுதாபம் தேட நினைக்கிறார். என்னை குற்றவாளி ஆக்கிறார்” என்றும் சாடினார்.
அவமானம், கோபம், எதிர்ப்பு
“மேடையில் நாகரிகமின்றி நடந்தவர் யார் ? கட்சியை கட்டுப்பாட்டுடன் நடத்த முயன்றேன். ஆனால் அன்புமணி அந்த கட்டுப்பாட்டை உடைத்தார். தலைமைக் பண்பு, மரியாதை எதுவும் இல்லை,” என வருத்தம் தெரிவித்தார்.
அமைதி வேண்டுமானால் தீர்வு ஒன்று !
ராமதாஸ் கூறியதாவது:
“தலைமை என்ற வார்த்தையை அன்புமணி விட்டுவிட்டு, ஒரு தொண்டனாக செயல்படுவேன் என்று கூறினால் பிரச்னை தீரும். ‘அப்பா’ என்றும் ‘அய்யா’ என்றும் சொல்ல வேண்டியதில்லை.”
கூட்டணியில் கருத்து வேறுபாடு
அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமென ராமதாஸ் விரும்பியதையும், அதனை அன்புமணி எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார்.
“அதிமுகவுடன் சேர்ந்திருந்தால் நாங்கள் குறைந்தது 3 தொகுதிகளில் ஜெயித்திருப்போம். அன்புமணியின் முடிவால் அதற்கான வாய்ப்பு போய்விட்டது,” என்றார்.
போலி பேச்சு, உண்மைகள் மறைப்பு
“பனையூர் அலுவலகத்திற்கு வாருங்கள் என அன்புமணி அழைத்தது உண்மையா ? நானும் நிர்வாகிகளும் புறக்கணிக்கப்படுகிறோம். பொய்களை மூச்சுவிடும் அளவுக்கு பேசுகிறார்,” என கடும் விமர்சனம் செய்தார்.
சவுமியாவின் பங்கு
அன்புமணியின் மனைவி சவுமியா, பா.ஜ.,வுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும்,
“அண்ணாமலையை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார்கள். எனக்கு தெரிவிக்காமல் நடந்தது,” என குற்றஞ்சாட்டினார்.
இனி என்ன ?
இந்த மோதல், பா.ம.க.-வில் பெரும் பிளவுக்கு வழிவகுக்கும் சாத்தியமுள்ளது. தந்தை மகன் இடையேயான உட்போரால் கட்சி எதிர்காலம் என்னவாகும் என்பது அடுத்த நாட்களில் தெரியும்