தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவு அரங்கம் அரசு அறிவித்த இடத்திலேயே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பேரணியாக வந்து தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் ஜெர்மனிய மிஷனரி சீகன்பால்கு அவர்களின் திருவுருவச் சிலையையும், நினைவு அரங்கத்தையும் அரசு ஏற்கனவே அறிவித்த இடத்திலேயே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தரங்கம்பாடியில் இன்று கண்டன ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

1706-ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வருகை தந்த சீகன்பால்கு, தமிழை கற்று தமிழை வளர்ப்பதிலும், தமிழகத்தில் முதல் அச்சு இயந்திரத்தை நிறுவி அச்சுக்கலை மற்றும் காகித ஆலைகளை உருவாக்குவதிலும் மிக முக்கிய பங்காற்றினார்.. அவரது நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. பூம்புகார் எம். எல். ஏ நிவேதா முருகன் முயற்சியால், சீகன்பால்குவின் நினைவு அரங்கம் மற்றும் சிலை அமைப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
பொறையாரில் உள்ள தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் அருகிலேயே இதற்கான இடத்தைத் தேர்வு செய்து, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கடந்த 20.12.2025ல் மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். அப்போது மாவட்ட தலைமை மீனவர் கிராமமான தரங்கம்பாடி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மணிமண்டபத்தை தரங்கம்பாடியில் தான் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மாற்று இடம் இருந்தால் இடத்தை மாற்றி மணிமண்டபம் அமைக்கலாம் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் தமிழறிஞர் சிகன்பால்கு மணிமண்டபம் கட்டிடப் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது. நினைவு அரங்கம் கடற்கரை ஓரத்திலோ அல்லது தனியார் மற்றும் திருச்சபைக்குச் சொந்தமான இடங்களிலோ மாற்றப்படலாம் என்ற தகவல் பரவியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு அறிவித்த இடத்தில் கட்டாமல் மாற்று இடத்தை தேர்வு செய்தால் எதிர்காலத்தில் சட்ட ரீதியான சிக்கல்களையும், நடைமுறை சிரமங்களையும் உருவாக்கும் என தெரிவித்து அரசு அறிவித்த இடத்திலேயே மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகளை ஏந்தி பொறையார் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“சீகன்பால்கு தமிழகத்திற்கு வந்து 320 ஆண்டுகள் நிறைவடைவதற்குள், வரும் ஜூலை மாதத்திற்குள், இந்த நினைவு அரங்கத்தைக் கட்டித் திறந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்” என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : நெல்சன்

Exit mobile version