எருக்கூர் இருளந்தோப்பில் தலித்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி 8 மாதமாகியும் இடத்தை வழங்காத துறையினரை கண்டித்து போராட்டம்

சீர்காழி அருகே எருக்கூர் இருளந்தோப்பில் தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி 8 மாதமாகியும் இடத்தை அளவீடு செய்து வழங்காத மாவட்ட வருவாய் துறையினரை கண்டித்தும் உடனே அளவீடு செய்து இடத்தை வழங்க கோரியும் இ-பட்டா பெற்ற பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயிலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது :-

மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 45 தலித் குடும்பத்தினருக்கு கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள இருளந்தோப்பு என்ற இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தும் வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல்வர் மயிலாடுதுறைக்கு சுற்றுப்பயணம் வந்தபோது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 45 தலீத் குடும்பத்தினருக்கு இருளந்தோப்பு பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. முதல்வர் கையால் இ-பட்டா பெற்ற பொதுமக்களுக்கு 8 மாதங்களாகியும் இதுவரை அவர்களுக்கு இடம் அளவீடு செய்து பிரித்து வழங்கப்படவில்லை. இந்த நிலையில் வீடுகட்ட இடம் இல்லாமல் 45 குடும்பத்தினரும் தவித்து வருவதாகவும், தங்களுக்கு உரிய இடத்தை அளவீடு செய்து உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காத மாவட்ட வருவாய் நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெய்யிலில் அமர்ந்து 1மணிநேரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக முன்புற நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆட்சியில் அலுவலகத்தில் உள்ளே மற்றும் வெளியே பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவிற்கு உரிய இடத்தை அளவீடு செய்து வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,உடனே தங்களுக்கான வீட்டுமனையை அளவீடு செய்து வழங்க வலியுறுத்தியும் தொடர் கோஷங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Exit mobile version