சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2 நாள் பயணமாக நாளை தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
நாளை காலை 11.40 மணியளவில் தனியார் விமானம் மூலம் சென்னை வரவிருக்கும் ஜனாதிபதி முர்மு, அதைத்தொடர்ந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்ள உள்ளார்.
நாளை மாலை அவர் சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குவார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், ராஜ்பவன் உள்ளிட்ட இடங்களும், அவரின் வாகனப் பயண பாதைகளும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அந்த பகுதிகளில் ட்ரோன் கேமரா மற்றும் பறக்கும் பொருட்கள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 10.55 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி வரவிருக்கும் ஜனாதிபதி முர்முவை, தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே. சரவணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, அங்கு நடைபெறும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
பின்னர் மாலை 4.30 மணிக்கு திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் தரையிறங்குகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்.
அதன்பின் மாலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையம் திரும்பி, இரவு உணவுக்குப் பிறகு இரவு 7 மணிக்கு தனியார் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை, ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.















