மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராஜ்குமார் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 3 ஆம் தேதி தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதடைந்ததால் அருகே உள்ள ஜெகதாம்பட்டினம் மீனவ கிராமத்திற்கு சென்று படகை சீரமைத்துள்ளனர். மீண்டும் அங்கிருந்து புறப்பட மீன்வளத்துறை அனுமதி கிடைக்க தாமதமானதால் சனிக்கிழமை அன்று ஜெகதாம்பட்டினத்தில் இருந்து தரங்கம்பாடி நோக்கி படகில் புறப்பட்டுள்ளனர். நடுக்கடலில் வரும் போது மீண்டும் படகில் பழுது ஏற்பட்டு காற்றின் போக்கில் படகு இலங்கை கடற்பரப்பிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் எவ்வித தொலை தொடர்பும் இல்லாமல் பழுது குறித்தும் தெரிவிக்க முடியாமல் தத்தளித்த மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் 14 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
படகு பழுதால் திசைமாறி சென்ற 14 மீனவர்களையும் ஒரு கோடி மதிப்பிலான விசை படகையும் மீட்டுத்தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் இன்று வானகிரி மீனவகிராமத்தில் சென்று இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்ட மீனவர் குடும்பைத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழக அரசு மூலம் மீனவர்கள் மற்றும் படகை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


















