பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘ட்யூட்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதை முன்னிட்டு நடிகர் பிரதீப் தனது உதவியாளர் சேகருக்கு அளித்த மனம் நெகிழச் செய்த பரிசு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் படக்குழுவினருக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. அந்நிகழ்வில் பிரதீப்பின் உதவியாளர் சேகருக்கு கேடயம் வழங்கப்படாமல் தவறி விட்டது. இதை மனதில் வைத்து, பிரதீப் அவருக்காக கேக் வெட்டி, சிறப்பு கேடயம் ஒன்றை வழங்கி அந்த தருணத்தை நினைவாகக் கொண்டாடியுள்ளார்.
இந்த அன்பு செயலில் நெகிழ்ந்த சேகர், சமூக வலைதளத்தில், “ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும், ஒருவரின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது. அந்த நாள் என் வாழ்வில் ஒரு இனிமையான கணமாக இருந்தது. இன்று அந்த இனிமையான தருணங்களை பகிர்கிறேன். மிக்க நன்றி பிரதீப் அண்ணா,” என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது:
“சேகர் என் பர்சனல் அசிஸ்டென்ட். ‘டிராகன்’ படத்தில் மிகுந்த உழைப்புடன் பணியாற்றினார். 100வது நாள் விழாவில் அனைவருக்கும் ஷீல்ட் வழங்கும்போது, சேகரின் பெயர் தவறுதலாக விடுபட்டது. அதை நினைத்தாலே மனம் வருந்துகிறது. அவரைப் போன்ற அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒருவருக்கு மரியாதை கொடுக்காமல் விடுவது தவறு என உணர்ந்தேன். அதனால், அவருக்காக தனிப்பட்ட முறையில் ஷீல்ட் வழங்க முடிவு செய்தோம்,” என தெரிவித்துள்ளார்.
பிரதீப்பின் இந்த அன்பான செயல் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.