செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரியில் சங்கத்தமிழர் மரபுப்படி பொங்கல் விழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற செங்கமலத் தாயார் அறக்கட்டளை மகளிர் தன்னாட்சி கல்லூரியில், தமிழர்களின் உன்னதத் திருநாளான பொங்கல் பெருவிழா பண்பாட்டு மணம் கமழக் கொண்டாடப்பட்டது. வானம் பார்த்து விதை விதைத்து, உழைப்பையே வழிபாடாகக் கொண்டு வாழும் தமிழர்களின் வாழ்வியலைப் போற்றும் விதமாகவும், இயற்கையோடு இணைந்த தமிழ்நாட்டின் தொன்மையான மரபுகளை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாகவும் இவ்விழா ஒருங்கிணைக்கப்பட்டது. கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உளவியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த “பாரம்பரிய பொங்கல் திருவிழா” வளாகம் முழுவதையும் கிராமியத் திருவிழாக் கோலமாக மாற்றியிருந்தது.

கல்லூரி தாளாளர் வி. திவாகரன் தலைமை வகித்து, மண்பானையில் அரிசியிட்டுப் பொங்கல் வைக்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழர்களின் கலைச் செல்வங்களான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நடனங்களை மாணவிகள் அரங்கேற்றினர். உழைப்பின் உயர்வையும் இயற்கையின் கொடையையும் போற்றும் வகையில் அமைந்த இந்தக் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. மேலும், பேராசிரியர்களுக்கிடையேயான திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகப் பிரம்மாண்டமான கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வண்ணமயமான கோலங்கள் தீட்டப்பட்டன.

விழாவின் ஒரு பகுதியாக, ஆடைத் தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பில் மாணவிகளால் உருவாக்கப்பட்ட நுணுக்கமான அலங்காரக் கைவினைப் பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், நமது மண்ணின் சுவையை மீட்டெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவு அங்காடிகள் அனைவரையும் ஈர்த்தன. இதில் சிறுதானிய உணவுகள் மற்றும் கிராமிய தின்பண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. விழாவில் துணை முதல்வர் அனுராதா, இணைப் பேராசிரியர் கோ.கி. கோமதி மற்றும் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் தங்களின் குடும்ப விழாவைப் போலப் பங்கேற்று மகிழ்ந்தனர். நவீன காலத்திலும் நமது பண்பாட்டு மகத்துவத்தை விட்டுக்கொடுக்காமல் மாணவிகள் கொண்டாடிய இந்த பொங்கல் விழா, மன்னார்குடி பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Exit mobile version