திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். அவருக்கு 101 வயது.
தந்தையின் மறைவுச் செய்தியை சினேகன் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,
“நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் மற்றும் அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம். எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்குக் காலமானார் என்ற துயரச் செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கரியப்பட்டி கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சினேகனின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், தனது இரங்கல் பதிவில், “என் அன்புத் தம்பி, மக்கள் நீதி மய்யம் மாநில இளைஞரணிச் செயலாளரான கவிஞர் சினேகனின் தந்தையார் திரு. சிவசங்கு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். சினேகனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதியுள்ளார்.
சினேகன் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புத்தம் புது பூவே’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். பின்னர் ‘மனு நீதி’, ‘மௌனம் பேசியதே’, ‘பகவதி’, ‘சொக்கத்தங்கம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.
கடைசியாக அவர் ‘திரு. மாணிக்கம்’ திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருந்தார். திரைப்படத்துறையைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் சினேகன், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார்.

















