பாஜக எந்த மாநிலத்திற்குள் நுழைந்தாலும் அங்குள்ள ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காட்டம் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் பாஜக அரசின் வாக்கு திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்குத் திருட்டை தடுக்க வேண்டும். வாக்குகளை அபகரித்தவர்கள் பதவி விலக வேண்டும். இந்த நோக்கத்தில் இரண்டு கோடி கையெழுத்துகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம். குறைந்தது ஒரு கோடி கையெழுத்துகள் எட்டப்படும். அதை குடியரசுத் தலைவரிடம் அனுப்புவோம்” என்றார்.
அதிமுக குறித்து பேசும்போது, “எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சியின் உரிமையாளர். ஆனால் பஞ்சாயத்து செய்வது அமித்ஷா. வீட்டின் உரிமையாளர் வேறு, ஆட்சியில் முடிவெடுப்பவர் வேறு என்கிற நிலை உருவாகிவிட்டது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது” என அவர் சாடினார்.
பாமக பிரிவினையை குறித்தும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தெரியாமல் கட்சியின் தலைமை அலுவலக முகவரியை மாற்றியிருப்பது பாஜகவின் சித்து விளையாட்டு. தேனாம்பேட்டை அலுவலகம் திலகர் நகருக்கு மாற்றப்பட்டது தேர்தல் ஆணையம் விசாரிக்காமல் நடந்தது. இது ஜனநாயக படுகொலைக்கு உதாரணம்” என்றார்.
மேலும், “பாஜக நுழைந்த மாநிலங்களில் இதேபோல் ஜனநாயகத்தை பாதித்துள்ளது. அதிமுகவை பல பிரிவுகளாக ஆக்கியது. இப்போது பாமகவும் இரண்டாகப் பிரிந்துள்ளது. சமூகநீதிக்காக போராடிய பாமக இன்று சிக்கலில் சிக்கியுள்ளது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதே நேரத்தில், “நாங்கள் இந்தியா கூட்டணியுடன் வலிமையாக இருக்கிறோம். எங்கள் பாதை மற்றும் பேச்சு குறித்து புதிய வழிகாட்டுதல் தேவைப்பட்டால், அதை அகில இந்திய தலைமை மட்டுமே தரும். தமிழக காங்கிரஸாராக எங்களுக்கு தனிப்பட்ட அறிவுறுத்தல் எதுவும் வரவில்லை. இந்தியா கூட்டணியில் நாங்கள் உறுதியாகப் பயணிக்கிறோம்” என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.