பாட்டாளி மக்கள் கட்சியைச் சுற்றி நீண்ட நாட்களாக நிலவி வந்த தலைமைப் பதவி சர்ச்சைக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவையே சட்டபூர்வமாக ஏற்று, கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றின் உரிமையையும் அவருக்கே வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
கட்சித் தலைமையைக் கைப்பற்றும் நோக்கில் கடந்த மாதங்களில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இரு தரப்பினரும் தனித்தனியாக பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தினர். இருவரின் தீர்மானங்களும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், அன்புமணியின் கூட்டமே செல்லுபடியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தி.நகர் பாமக அலுவலகம் அதிகாரப்பூர்வ தலைமையகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைவர், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் என்ற வகையில் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், கட்சியின் கொடி, சின்னம், பெயரை பயன்படுத்தும் உரிமை அன்புமணி தரப்புக்கே வழங்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், கட்சியின் நிறுவனராக ராமதாஸ் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவருடன் இணையும் தரப்பினருக்கு தேர்தல் சின்னம் கிடைக்காது என்பதையும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
தங்களுக்கு சாதகமாக முடிவு வரும் என எதிர்பார்த்த ராமதாஸ் அணிக்கு இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தை தொடங்குவார் என அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.