தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடிகை சதா உணர்ச்சி வசப்பட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் தெரு நாய் கடித்து 6 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், டெல்லி நகரில் உள்ள சுமார் 10 லட்சம் தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, விலங்குகள் நல ஆர்வலராக செயல்பட்டு வரும் நடிகை சதா, தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்தார். வீடியோவில், “6 வயது குழந்தையின் மரணம் ரேபிஸ் நோயால் அல்ல என்று நிரூபிக்கப்பட்ட பிறகும், இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. 10 லட்சம் நாய்களுக்கு அரசால் நிரந்தர அடைக்கலம் கொடுக்க முடியாது என்பதால், அவற்றை கொல்லும் அபாயம் உள்ளது. இது, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாத மாநில அரசு மற்றும் நகராட்சியின் தோல்வி” என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், “நான் உள்பட பலரும் சொந்தப் பணத்தை செலவு செய்து நாய்களை காப்பாற்ற முயற்சி செய்கிறோம். ஆனால், அது போதுமானதாக இல்லை. வீட்டில் அழகான நாய்க்குட்டி வேண்டும் என்பதால் வெளிநாடுகளிலிருந்து விலைக்கு நாய்களை வாங்கி வளர்க்கும் பழக்கம், தெரு நாய்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த நாய்களை தண்டிப்பது தவறு. விலங்குகள் மீது அன்பு கொண்டவர்கள் என்று சொல்வதற்கே இந்நாடு தகுதியற்றது” என சதா உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார்.
சதாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.