மன்னார்குடி அருகே கம்பங்குடி ஆர்ச்யில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பனையூர் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் திருச்சி , வேதாரண்யம் சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. குறிப்பாக கமலபுரம் மற்றும் மேலபனையூர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்ததுடன், அதிகாரிகள் முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், பனையூர் ஊராட்சியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குளங்களை முறையாக அளவீடு செய்ய வேண்டும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும், செயல்படாமல் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்பங்குடி ஆர்ச் பகுதியில் திருச்சி, மன்னார்குடி , வேதாரண்யம் ,திருத்துறைப்பூண்டி சாலையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர்செல்வம், தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ. பத்மாவும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பொது மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது .













