மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் பழனிச்சாமி ஆய்வு, தொடர்ந்து பனி பெய்து வருவதால்
நெல் ஈரப்பத வரம்பை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1,71,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்வதற்காக, மாவட்டம் முழுவதும் 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் ஆய்வு
இந்த கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் நெல் கொள்முதல் பணிகள் குறித்து, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
விவசாயிகளின் கோரிக்கை
ஆய்வின் போது விவசாயிகள் அதிகாரிகளிடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தனர்:
தற்போது நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 17% இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், தற்போதைய பனிக்காலம் காரணமாக நெல்லின் ஈரப்பதம் 24% வரை உள்ளது.
நெல்லை காயவைத்து ஈரப்பதத்தைக் குறைப்பதற்கு கூடுதல் செலவு ஏற்படுவதால், கொள்முதல் வரம்பை 19% வரை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
விவசாயிகளின் கோரிக்கையை , கேட்டறிந்த அதிகாரிகள், நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த இயந்திரம் மூலம் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். அப்போது 21 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் இருந்தது. இதனை அடுத்து விவசாயிகள் குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து, விவசாயிகளுக்குச் சாதகமான நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

















