பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், மார்கழி மாதம் பிறந்தது முதலே மாலை அணிந்து விரதமிருந்து பழநி நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்குவது வழக்கம். இவர்கள் அய்யலூர் மற்றும் வடமதுரை மார்க்கமாக எரியோடு நால்ரோடு பகுதிக்கு வந்து, அங்கிருந்து வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் வழியாகப் பழநியைச் சென்றடைகின்றனர்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் நீண்ட தூரப் பயணத்தின் களைப்பைப் போக்கிக் கொள்ளவும், இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் ஆங்காங்கே தற்காலிகத் தங்குமிடங்கள் தேவைப்படுகின்றன. வழக்கமாக ஆண்டுதோறும் பக்தர்களின் நலன் கருதி பழநி தேவஸ்தானம் சார்பில் எரியோடு நால்ரோடு போன்ற முக்கிய சந்திப்புகளில் தற்காலிக நிழற்கூரைகள் மற்றும் ஓய்வு அறைகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ள நிலையிலும், தற்போது வரை எரியோடு பகுதியில் எந்தவித நிழற்கூரை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலிலும், இரவு நேரங்களில் நிலவும் கடும் பனியிலும் ஒதுங்க இடமின்றி பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஓய்வெடுக்க முறையான இடவசதி இல்லாததால், முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் சாலையோரக் கடைகளின் வாசல்களிலும், வீடுகளின் திண்ணைகளிலும் சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது. கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் பக்தர்கள் தங்குவதற்கு இடமின்றி சாலையோரங்களிலேயே அமர்வதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. “கடந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்ட நிழற்கூரைகள் எங்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன, தற்போது அவை இல்லாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது” எனப் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, எரியோடு நால்ரோடு பகுதியில் போர்க்கால அடிப்படையில் தற்காலிக நிழற்கூரைகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளைச் செய்து தர பழநி தேவஸ்தான நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

















