பிரபல பாகிஸ்தான் நடிகையும் மாடலுமான ஹூமைரா அஸ்கர, கராச்சியில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூரைச் சேர்ந்த ஹூமைரா, 2015ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் நுழைந்து, ஜஸ்ட் மேரீட், எஹ்சான் ஃபராமோஷ், குரு மற்றும் சல் தில் மேரே ஆகிய தொடர்களில் நடித்தவர். 2015ல் வெளியான ‘ஜலைபீ’ திரைப்படம் மற்றும் 2021ல் ‘லவ் வாக்சின்’ திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
2022ல் ARY டிஜிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘தமாஷா’வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து, 2023ல் ‘தேசிய பெண் தலைமைத்துவ விருது’ வழங்கும் விழாவில், சிறந்த வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருதையும் பெற்றிருந்தார்.
மரணம் குறித்து சந்தேகம்:
ஜூலை 9ம் தேதி, ஹூமைரா வசித்திருந்த குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியது குறித்து அண்டைவாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வீடு திறந்து பார்வையிட்ட போலீசார், அழுகிய நிலையில் சடலமாக கிடந்த ஹூமைராவை கண்டெடுத்தனர்.
அவரது மரணம் 2 வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்திருக்கலாம் என தொடக்கத்திலேயே போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்த ஹூமைரா, கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும், அவருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலிருந்ததாகவும் தெரிகிறது.
அவரது உடல் தற்போது மருத்துவக் கணிப்புக்காக அனுப்பப்பட்டு , உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னர் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் ஹூமைராவின் மரணம் தொடர்பான செய்திகள் வேகமாக பரவி வருவதால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் பெரும் துயரத்தில் உள்ளனர்.