குவைத்தில் உள்ள இந்தியர்களிடம் பேசிய ஹைதராபாத் மக்களவை உறுப்பினரும் AIMIM கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். “ஒரிஜினலைக் காப்பி அடிப்பதற்கே ஒரு திறமை தேவைப்படுகிறது; அந்தத் திறமையும் பாகிஸ்தானிடம் இல்லை,” என்று அவர் சாடினார்.
வளைகுடா நாடுகளுக்கு பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கும் நோக்கில், மத்திய அரசு அமைத்துள்ள பலகட்சி குழுக்களில் ஒவைசி ஒருவராகக் கலந்துகொண்டுள்ளார். இந்தக் குழு சமீபத்தில் குவைத்துக்கு பயணித்தது.
அங்கு இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஒவைசி, 2019-இல் சீன ராணுவம் நடத்திய பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாகிஸ்தான் தனது ராணுவத்தால் எடுக்கப்பட்டதெனக் கூறி பிரதமர் ஷெரிப் முன்னிலையில் அதை பரிசாக வழங்கியதை குறிப்பிட்டார். இதன் மூலம், “தாங்கள் உண்மையானவர்கள் அல்ல என்பதையும், மற்றவர்களின் விஷயங்களையே நகலெடுக்கவே முயல்கிறார்கள் என்பதையும் பாகிஸ்தான் நிரூபித்துவிட்டது” எனக் கூறினார்.
“இந்த ஜோக்கர்கள் தான் இந்தியாவுடன் போட்டியிட விரும்புகிறார்கள்,” என்ற கடுமையான வார்த்தைகளில் ஒவைசி பாகிஸ்தானை விமர்சித்தார்.