உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி
புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக படையெடுக்கும் பக்தர்கள்: பல மையில் தூரம் நடந்து வரும் நிலையில் களைப்பு தெரியாமல் இருக்க ஏதுவாக கும்மி பாடல்கள் பாடியும் மரியே வாழ்க ஆவே மரியா என கோஷமிட்டபடி வேளாங்கண்ணி நோக்கில் நடைபயணம்
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், இந்தியாவின் “லூர்து” என்று அழைக்கப்படுகிறது.
ஆரோக்கியம், குழந்தை பாக்கியம், கல்வி செல்வம் எனப் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றும் அன்னையின் அருளிடம், ஆண்டுதோறும் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெறும் கொடியேற்றுத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார். இதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாதிரியாக வேளாங்கண்ணி நோக்கி படையெடுப்பர். அதன் ஒருபகுதியாக அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஜெபக்குழுவினர் மேற்கொள்ளும் பாதயாத்திரை 25 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு வெள்ளிவிழா ஆண்டாக இருப்பதால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வரதராஜன்பேட்டையிலிருந்து புறப்பட்ட யாத்திரிகர்கள், மீன்சுருட்டி, திருப்பனந்தாள், வடகரை, திருவாரூர், கீழ்வேளூர், புத்தூர், பரவை வழியாக
150 கிலோமீட்டர் பயணித்து
வேளாங்கண்ணி புனித தலத்தை சென்றடைய உள்ளனர்.
வழியெங்கும் “மரியே வாழ்க… ஆவே மரியா” என கைகளை உயர்த்தியபடி, கும்மி பாடல்கள் பாடியபடி பக்தியுடன் நடைபயணத்தை மேற்கொண்டனர்.
ஜெபக்குழுத் தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமையில் நடைபெறும் பாதயாத்திரை பயணத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வேளாங்கண்ணி நோக்கி நடந்து செல்கின்றனர்.
வழியில் களைப்பு தெரியாமல் இருக்க ஏதுவாக பாடல்கள் பாடியபடியும் கும்மி அடித்தும், மரத்தின் நிழலில் இளைப்பாரி பின்னர் தங்களது நடை பயணத்தை தொடர்கின்றனர். கொடி ஏற்றத்துடன் தொடங்கும் ஆண்டு விழா, 11 நாட்கள் நடைபெறும் நிலையில் திருப்பலிகள் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் பங்குகொண்டு தங்களது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர்.
ஒவ்வொரு ஆண்டும் தனிப்பட்ட பிரார்த்தனையோடு மேற்கொள்ளப்படும் இந்த பாதயாத்திரை வழியாக, பலருக்கு குழந்தைப் பாக்கியம், கல்வியில் சிறப்பு என அன்னை அருள் கிடைத்ததாக யாத்திரிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிவிழா ஆண்டு பாதயாத்திரையும், கொடியேற்றத் திருவிழாவும் – இரண்டையும் இணைத்து பக்தியினால் ஒளிரும் வேளாங்கண்ணி, உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்த்துக் கொண்டே செல்கிறது என்பதில் ஐயமில்லை
