லாஸ் ஏஞ்சல்ஸ் : உலக திரைப்பட உலகில் பெருமை வாய்ந்த ஆஸ்கார் விருதுகளை வழங்கும் அமெரிக்க அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸஸ் (AMPAS), 2025ம் ஆண்டுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, உலகளாவிய அளவில் 534 புதிய படைப்பாளிகளுக்கு உறுப்பினர் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சேர்ந்த 8 முன்னணி சினிமா கலைஞர்கள் இந்த ஆண்டில் உறுப்பினர் அழைப்பைப் பெற்றுள்ளனர். இவர்களில் முக்கியமாக உலக நாயகன் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, ஒளிப்பதிவாளர் ரனபீர் தாஸ், ஒப்பனைக் கலைஞர் மேக்ஸிமா பாஸு, இயக்குநர் பாயல் கபாடியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம், ஆஸ்கார் விருது வழங்கும் ஜூரி குழுவில் உறுப்பினராக இடம் பெற முடியும். இதன் மூலம், எதிர்வரும் ஆண்டுகளில் விருதுக்குத் தேர்வாகும் படங்களை பார்வையிட்டு, விருதுக்கான வாக்களிப்பில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
முன்பே அழைப்பு பெற்றவர்கள் :
இந்திய சினிமா உலகில் முன்னதாக அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, அமீர் கான், சல்மான் கான், தீபிகா படுகோனே, அனுபம் கேர், மணி ரத்னம், சூர்யா உள்ளிட்டோர் ஆஸ்கார் அகாடமி உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
RRR திரைப்படம் உலகளவில் பாராட்டைப் பெற்ற போது, அதில் பணியாற்றிய ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் NTR, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, “நாட்டு நாட்டு” பாடலாசிரியர் சந்திரபோஸ், ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் ஆகியோருக்கும் அண்மையில் இத்தகைய அழைப்பு வழங்கப்பட்டிருந்தது.
புதிய விதிமுறை :
2025ம் ஆண்டு முதல், ஒரு புதிய விதி அமலில் வருகிறது. அதன் படி, ஒரு குறிப்பிட்ட பிரிவில் வாக்களிக்க விரும்பும் உறுப்பினர்கள், அந்த பிரிவில் உள்ள அனைத்து படங்களையும் பார்த்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், ஒருசில படங்களையே பார்த்தாலும் வாக்களிக்க அனுமதி இருந்தது.
கமல்ஹாசனுக்கு புதிய வாய்ப்பு :
கமல்ஹாசன் இந்த உறுப்பினர் அழைப்பை ஏற்றுக்கொண்டால், அவர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் படங்களை பார்வையிட்டு, தனது விருப்பமான படங்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெறுவார். இது, அவரது கலை உலக அனுபவத்தை பன்னாட்டு அளவிலும் வெளிப்படுத்தும் முக்கிய வாய்ப்பாகும்.