மயிலாடுதுறை அருகே பிரபல ரவுடியை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள சகோதரர்களை தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவு:-
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம், ஆத்தூர், நடுத்தெருவைச் சேர்ந்தவர் வீரமணி மகன் சுமன் (40) என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த மே 3-ம் தேதி ஆத்தூரில் தலை துண்டிக்கப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சுமனின் உறவினர்களான கடலங்குடி, மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையன் மகன்களான முரளி (42) மற்றும் தர்மராஜ் (40) ஆகியோர் மணல்மேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் முரளி, தர்மராஜ் ஆகியோர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், கைது செய்யப்பட்ட முரளி, தர்மராஜ் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மகாலட்சுமி மற்றும் மணல்மேடு போலீசார் முரளி, தர்மராஜ் ஆகியோரை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.















