கடலூர் : தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைப்பில் உருவான இந்த படம், கடந்த வியாழக்கிழமை இந்தியா முழுவதும் வெளியானது. திரைப்படத்தில் இலங்கை தமிழர்களின் தலைவரான முருகன் என்ற கதாபாத்திரம் இடம் பெற்றுள்ளதோடு, தமிழர்களை கொடியவர்களாகவும், அவர்களை அழித்து புதிய ஆட்சி அமைக்கப்படும் போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக நாம் தமிழர் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழர்களை அவமதிக்கும் வகையில் படம் அமைந்துள்ளது” எனக் கூறி, தமிழ்நாட்டில் இதை வெளியிடக்கூடாது என்றும், திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் வகையில், கடலூரில் ‘கிங்டம்’ திரைப்படம் வெளியான திரையரங்குகளுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.