ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் நடைபெறும் ரதயாத்திரை விழாவில், (ஜூன் 27, 2025) ஏற்பட்ட கடும் கூட்டநெரிசலால் மூன்று பேர் உயிரிழந்தும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், ஹிந்துக்களிடையே மிக முக்கியமானதொரு புனித தலம். இங்கு நடைபெறும் ரதயாத்திரை விழா ஒன்பது நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும். இந்த ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
நேற்றைய தினம், விழாவுக்கான பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகருக்குள் திரண்டனர். கூட்டத்தை சமாளிக்க 10,000 பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 625 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 9 பேர் ஆபத்தான நிலைமையில் உள்ளனர்.
இதனால், ஒரு கட்டத்தில் ரதயாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் தொடரப்பட்டது. இதற்கிடையே, கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் ரதயாத்திரையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் நகரும் போது ஏற்பட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்தனர். அவர்கள் – பிரேமகந்த் மொகந்தி (வயது 80), வசந்தி சாகு (36), மற்றும் பிரபதி தாஸ் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, கூடுதல் படையணியை அழைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதியளவில் செய்யப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்தார். மேலும், பாதுகாப்பு முறையில் அலட்சியம் காட்டிய புரி காவல் துணை ஆணையர் விஷ்ணு சரண் பாதி மற்றும் கமாண்டெண்ட் அஜய் பதி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் சித்தர்த் ஸ்வைன் மற்றும் எஸ்.பி. பினிட் அகர்வால் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
“பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் உறுதியளித்தார்.