சென்னை: “தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை, எனக்கும், என் தொண்டர்களுக்கும் தூக்கம் இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :
“கடந்த ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 25 வரை ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற கோஷத்துடன் எழுச்சி பயணத்தை மேற்கொண்டேன். கோவையில் தொடங்கி திருச்சி வரை 40 நாட்கள், 24 மாவட்டங்கள், 118 சட்டசபை தொகுதிகளை கடந்த 6,728 கி.மீ பயணம் செய்தேன். இந்த பயணத்தில் சுமார் 60 லட்சம் மக்களை சந்தித்தேன். அனைத்து தரப்பினரும் அளித்த வரவேற்பு, அ.தி.மு.க.விற்கு மக்களின் ஆதரவை உறுதிப்படுத்துகிறது.
தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் அட்டூழியங்கள் நடைபெறுகின்றன. பல நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் மக்களிடம் ஏமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 51 மாதங்களுக்கு மேல் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி விட்டார்.
ஆட்சியைப் பிடித்த பின் தி.மு.க. அரசு கோமா நிலைக்குச் சென்று விட்டது. 2026 தேர்தலில் தமிழகத்தைப் பீடிக்கும் இந்த துயரத்திற்கு முடிவுரை எழுதுவோம். குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். புகைப்பட விளம்பர அரசியலை வீட்டுக்கு அனுப்புவோம். அ.தி.மு.க.வை மீண்டும் அரியணையில் அமர்த்துவோம்.
என் எழுச்சி பயணத்திற்கு கிடைக்கும் பேராதரவு முதலமைச்சர் ஸ்டாலினால் சகிக்க முடியவில்லை. நான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல பேசுகிறேன் என அவர் கூறுகிறார். ஆனால் நான் சாதாரண தொண்டன், மக்களில் ஒருவன் மட்டுமே.
முன்கள வீரனாக என் எழுச்சி பயணம் தொடரும். தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் வரை, எனக்கும் தொண்டர்களுக்கும் தூக்கம் இல்லை. வரும் 2026ல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி” என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.